நன்றாக நினைவிருக்கிறது, முதலும் கடைசியுமாக உன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தது. இனியென்றும் முடியாது, உன்னால் முடிந்தாலும்,என்னால்.
எப்போதாவது என்மேல் விழும் உன் கடைவிழியமுது பருகி இறவாது காத்திருக்கிறேன், அடுத்த முறைக்காக.
Saturday, July 19, 2014
நீரகராதிக்காரி நீ. ஏற்கும் பொறுளின் பொருளேற்கும் விந்தைச்சொற்களின் சொந்தக்காரி. கடலாழ அமைதியும் அருவியாய் வீழ்ந்தறைந்தெழும் ஆவியும் இன்னும் இன்னும் உன் அறியா அனைத்து வடிவங்களுக்குள்ளும் எதிலோ மறைந்த சிறுதுளி நான். நீரகராதிக்காரி நீ.
பூட்டில் சாவியுடனேயே சார்த்தியிருக்கிறது, என்னறைக்கதவு. திறந்தால் பூட்டிக்கொள்ளும். பூட்டினால் திறக்கும். தெரிந்தவர்மட்டுமே திறக்க முடியும் என்பதால் சாவியுடனேயே எப்போதும் சார்த்தியிருக்கிறது, என்னறைக்கதவு.