கழுதை தீர்க்கவேண்டும்,
கத்தி.
கவிஞன் தீர்க்கவேண்டும்,
எழுதி.
அதிகாலை எழுந்து
அனைத்தும் முடித்து
கிளப்பி,கிளம்பி.
தப்பிப்பிழைத்து
வீடுதிரும்பி
வேலைகள் முடித்து
மல்லிகை சூடிக்
காத்திருக்க.
கலைந்த தலை,
குத்தும் தாடி,
வியர்வை நாற்றம்,
எந்திரச் செய்கை.
கல்லாய் இறுகிக்
கட்டையாய்க் கிடந்தாலும்
என்ன செய்வது
மூக்கை?
அவளை இவன்
வைத்திருக்கிறான்.
இவளை அவன்
வைத்திருக்கிறான்.
பிறர் காமப்பேச்சில்
இழையோடும்,
எனக்கில்லையே.
ஒருவனுக்கு ஒருத்தி
ஒவ்வொரு புணர்விலும்
ஒவ்வொருத்தி.