Monday, April 30, 2012
கவிதை
எழுதுவது
எப்படி
?
எப்படிக் கவிதை எழுதுவது?
எழுதுவது எப்படி கவிதை?
எழுதுவது
கவிதை
எப்படி?
கவிதை.
கவிதை வாசித்துக்கொண்டே
தூங்கிப்போனேன்.
எழுவேனோ?
வாசிப்பேனோ?
எந்தக்கவலையும்
இல்லாமல் இருந்தது
இருந்தும் இல்லாத
கவிதை.
ஆணுக்குள் பெண்.
பெண்ணுக்குள் ஆண்.
ஆண்களும்
பெண்களும்
சேர்த்து வைத்த,
ஆணுக்குள் பெண்.
பெண்ணுக்குள் ஆண்.
கவிதைக்கு மட்டுமே தெரியும்
அதனுள் ஒளிந்துள்ள
காலம்.
பல்லைக்காட்டினேன்
உதவ அலைந்தேன்
பேசிப்பார்த்தேன்
பலனில்லை.
நடையைப்பார்த்தாயா?
கண்டிப்பாகப்
பலபேரைப்
பார்த்தவள்.
வீரப்பிரதாபனும்
தவளை இளவரசியும்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
காவல் காக்க
சிப்பிக்குள்
உயிர்.
வெயில் குடித்த காற்றில்
வியர்வையுடன் அலைகிறது
உடல்.
எப்போதும் என்னைத்
தொடர்கிறது
மரணம்.
நானாய் முடியாது
நீயாய் வா.
எட்டி நின்று சிரிக்கிறது
வந்தும் வராத
மரணம்.
Sunday, April 29, 2012
10 - 12
12 - 14
14 - 16
16 - 18
20 - 10
பெண்ணும் ஆணும்
பேசிச்சிரிப்பதை
ஒட்டிஉரசுவதைக்
கண்டவுடன் கொப்பளிக்கும்
பண்பாட்டுக் கோபத்தில்
இளமை கடந்துவிட்ட
ஏமாற்றமும் ஏக்கமும்.
சே,
என்ன உலகம் இது?
ஒருவர் கூட இல்லையா?
எங்கே போய்விட்டீர்கள்?
என்னைக்கவனிக்காமல்.
எல்லோரும்.
வாயை நிறுத்திவிட்டால்
நான் செத்து
நான் வாழலாம்.
விழுங்கிச் செரித்துவிட்டால்
நானும்
நானும்
சாகலாம்.
தவறைத் தொடர்ந்து
வருத்தமும் சபதங்களும்.
தப்பிப்பதற்காகத்
தத்துவங்கள்.
வாயால் வாழும் மனம்
வாழ்ந்தால் சாவு.
செத்தால் வாழ்வு.
எப்படியோ கிடைத்துவிடுகிறது
முதற்பக்கக் கவிதை எழுத
ஒரு டைரி.
கவர்ச்சி ஆட்டங்களை
கண் குளிரக்கண்டு
புது நொடியில்
வழிபட்டு
மனைவியை முத்தமிட்டுத்
தழுவித் தூங்கி
புதிய சபதங்கள்
ஏதுமில்லை.
நான்
பிறருக்கு?
எனக்கு?
மலருக்கு?
உயிருக்கு உயிராய்
ஓடி ஆடி
பேசிச் சிரித்து
அழுது பிரிந்து.
வாரமொன்று
மாதமொன்று
எப்போதாவது.
பசுமையாய்
மங்கலாய்.
பிரிவும் சுகம்.
பார்,
புல்தரை.
உற்றுப்பார்,
புல்.
இன்னும்,
நுனி.
இன்னும்,
பனித்துளி.
இன்னும்,
நீ,
எல்லாம்,
நான்.
களிமண் அல்ல
மூங்கில்.
அளவாய் வளைந்து
அதிகமானால் எறிந்து,
அதிகமானால் முறிந்து,
மூங்கில்.
Tuesday, April 24, 2012
கழுதை தீர்க்கவேண்டும்,
கத்தி.
கவிஞன் தீர்க்கவேண்டும்,
எழுதி.
என் ஏக்கங்களை
ஏமாற்றங்களை
அனுபவித்துவிடக்கூடாது
என் மகன்.
அப்பாவும்.
நானும்.
மகனும்,
வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி
காலச்சிறகசைத்து
பறந்து திரிந்தது.
சிறகுகளைப்பிடித்துக்
கற்றுத்தந்தனர்,
சரியான பாதையில்
சரியாகப்பறக்க.
கற்பித்தவர் கைகளில்
சிறகு வண்ணங்கள்
தூசியாய்.
சிறகுகள் கைகளாகத்
தோள்களில் பாரமாய்
காலம்.
கடிவாளம் கழற்றியதும்
எனக்கென நெருப்பு.
நெருங்கினேன்,சுட்டது.
விலகினேன், குளிர்ந்தது.
வெறியாய் அணைக்க
வியர்வையில் கரியாய்,
நெருப்பு.
Monday, April 23, 2012
அனைத்துப் பக்கங்களிலும்
அதே கவிதை
எழுதிய புத்தகமாய்
வாழ்க்கை.
எனக்குத்தெரியாது
தாத்தாவின் தாத்தாவை.
இனியும் தெரியாது
பேரனின் பேரனுக்கு
என்னை.
தினமும் தேடவேண்டியிருக்கிறது
அன்றைய உயிர்த்திருத்தலுக்கான
அத்தியாவசியங்களை.
சுடுகாட்டுப் பாதைகளாய்
சிந்தனைகள்.
ஏதும் அறியாமலேயே
பிணைக்கப்பட்டிருக்கிறேன்.
காலையில் வாசலில்
காத்திருந்தது,
கனவில் ஏறிச் சுற்றிய
வண்ணத்துப்பூச்சி.
நிசத்திலும் சுற்ற
நிர்வாணமாய் வா.
நனவில் கனவா?
காணாமல் போனது
வண்ணத்துப்பூச்சி.
வளர வளர
வளர்ந்த கோடு
அரை வட்டமாய்
அப்படியே நின்றுவிட ,
தேடி இணைத்தார்கள்
இன்னொரு
அரைவட்டத்தை.
முழு வட்டத்திற்குள்
அவளும் நானும்,
அரை வட்டங்களாய்.
அணுவளவு குறைந்தாலும்
எனக்குப் பாரமாய்.
அணுவளவும் குறையாமல்
அவளுக்குக் கடமையாய்.
நித்தமும் எனது
பாதையில் அவள்.
உயர்த்திய கைகளும்
முகம் நோக்கும் விழிகளும்.
முகம் பார்க்காமல்
முகம் திருப்பிக்
கடந்த வேளைகள்.
நிதம் பார்க்கும்
முகங்களில்
நிற்குமோ
என் முகம்?
தினம் உயரும் கைகளும்
திரும்பிய முகங்களும்.
அதிகாலை எழுந்து
அனைத்தும் முடித்து
கிளப்பி,கிளம்பி.
தப்பிப்பிழைத்து
வீடுதிரும்பி
வேலைகள் முடித்து
மல்லிகை சூடிக்
காத்திருக்க.
கலைந்த தலை,
குத்தும் தாடி,
வியர்வை நாற்றம்,
எந்திரச் செய்கை.
கல்லாய் இறுகிக்
கட்டையாய்க் கிடந்தாலும்
என்ன செய்வது
மூக்கை?
எதுவும் செய்ய வேண்டியதில்லை.
ஆளுக்கேற்றபடி
அதுவாய் மாறிக்கொள்ளும்.
எனக்குள் நான்
என்ன செய்தாலும்
என்னைக்கொன்று
நான் வாழும்.
நான் வாழ,
நான் சாக.
தான் சாக இயலா
தவிப்புகளுக்கு
புத்தகங்களே
தூக்க மாத்திரைகள்.
இயல்பாக இறந்துபோனார்
உறங்கும்போது தாத்தா.
சிலருக்கு மரணம்
குழந்தையின் அணைப்பு போல.
எப்படி?
நல்லாதானே இருந்தார்?
எப்படி?
நேத்துக்கூட பேசிக்கிட்டிருந்தோமே!
எப்படி?
உடம்புக்கு ஏதாவது...
எப்படிகளிடையே
எனக்குள்ளும்
எப்படி?
Sunday, April 22, 2012
அவளை இவன்
வைத்திருக்கிறான்.
இவளை அவன்
வைத்திருக்கிறான்.
பிறர் காமப்பேச்சில்
இழையோடும்,
எனக்கில்லையே.
ஒருவனுக்கு ஒருத்தி
ஒவ்வொரு புணர்விலும்
ஒவ்வொருத்தி.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)