Wednesday, November 5, 2014

வண்ணங்கள் குழைத்து
வடிவாயொரு ஓவியம் செய்கையில்
உயிர்வளி ஊதி ஊதி
உடல் சோர்ந்த வேளையில்
உள்ளம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
வார்த்தைகள் கோர்த்து
எண்ணம் இறக்கும் எத்தனிப்பின்
இறுதி எதுவானாலும்
இதயம் நிறைக்கும் என் சுவாசக்காற்று.
சும்மாஇருந்து மனம் வாடும் வேளைகளில்
தேடிச்சோறு நிதந்தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசும்
வேடிக்கை மனிதனல்ல நீயென
உயிர்த்துளிதரும் என் சுவாசக்காற்று.
என்னுடனே இருந்துவிடு என்பேன்,
பதிலேதும் சொல்லாமல்
ஒற்றைச்சிரிப்பை உதிர்த்தோடிவிடும்
எனக்கான என்சுவாசக்காற்று.

குப்பைவண்டியிலொரு குழந்தை.


பள்ளி செல்லும் வழியில் பார்த்தேன்.
குப்பை வண்டியில் ஒரு குழந்தை.
திடுக்கிட்டுத்திரும்பினேன்.
கட்டியுறங்கிய குழந்தை,
கழற்றிக்கொடுத்த குழந்தமையால்
குழந்தையான அதன்
அழுக்கடைந்த மென்மயிர்கள் மேல்
மேலும் மேலும் குப்பைகள்.


Friday, October 31, 2014

சிட்டுக்குருவியைக் காணவில்லை.!
என காங்கிரீட் காட்டுக்குள்ளிருந்து கத்து.

உலக வெப்பமயமாதலை எவ்வாறு குறைக்கலாம்?
ஏ .சி அரங்கினுள் வியர்க்கப்பேசு.

குடியின் கொடுமைகள் என்னென்ன?
'பீர'டித்து நுரைக்கப்பேசு.

che படம் போட்ட பனியன்,ஜீன்சுடன்
பொது இடங்களில் நிமிர்ந்துலாவு.

முகநூலில் கணக்குகள் தொடங்கு.
ஆண் பெயரில், அனைத்தையும் அள்ளிவிடு.
பெண் பெயரில், ஆண்களை அலையவிடு.

பெண்கள் வன்புணர்ச்சிக்குக் காரணம்,
தொலைக்காட்சியின் கலாச்சாரச் சீரழிவு,
இலவசங்கள் தேவையா?
ஆவண ,குறு,உலகப்படங்கள்,
நாட்டுப்புறக்கலை,இசை,ஓவியம்.
வரலாறு,மனோதத்துவம்,கல்வி,கலவி....
தொடர்ந்து ஏதேனும் பேசிக்கொண்டேயிரு.
தூக்கத்தில் கூடத் துணையுடனிரு.

கவனக்குறைவாக
வார்த்தைகள் நிறுத்தித் தனிமையில்
யோசிக்கத்தொடங்கிவிட்டால்,
விலாவில் இரு சிறகுகள் முளைக்கும்.
வானம் திறக்கும்.
வாழ்க்கை முடிக்கும்.


கவிதை வாசித்துக்கொண்டே
தூங்கிப்போனேன்.
எழுவேனோ?
வாசிப்பேனோ?
எந்தக்கவலையும்
இல்லாமல் இருந்தது,
இருந்தும் இல்லாத
அந்தக்கவிதை.


உண்மைத் தேடலின் வழியதிற்சிகளால்
மரணிக்காமல்,
என் சிறு பாதையை
வழுவ்ழுப்பாக்கிக் கொண்டு,,
நத்தையாய் நான்.


காலையில் கதவு திறக்கும்போது
என் கால்களுக்கிடையே புகுந்து
வீட்டுக்குள் ஓடியது ஓர் எலி.
திரும்பிப்பார்ப்பதற்குள் மறைந்து போனது.
எங்கே போயிருக்கும்?
நவீன சமயலறையில்,
குளிர் பதனப்பெட்டிக்குப் பின்,
மாடியேறி என் அறைப்புத்தகங்களுக்குள்,
படுக்கையறைக்கட்டிலின் கீழ்,
பிள்ளைகளின் பள்ளிப் பைக்குள்,
மூட மறந்த மனைவியின் சேலை அலமாரியுள்,
தொலைக்காட்சிப் பெட்டியுள்ளே,
ஓவியக் கித்தான் அணிற்கூட்டினுள்,
குளிர்சிக்காக குளியலறை மூலைக்கு,
ஹாலில் ஷோபா குஷனுக்கு கீழ்,
இல்லை...என் 'ஷு'க்குள்,
எங்கிருந்தால் என்ன.
மனிதன் புகுந்த இடத்திலிருந்த உயிரினமும்,
மனிதன் இருக்கும் இடத்தில் புகுந்த உயிரினமும்
பிழைத்ததாக வரலாறே இல்லை.
வீட்டின் கதவைத்திறந்தவுடன்,
மின்விசிறியின் இறக்கையை
திருப்பித்தந்துவிட்டுப்பறந்த
தவிட்டுக்குருவி பூசிச்சென்றது,
என் உதடுகளில் புன்னகையை.


சணலைச் சவைத்துப் பஞ்சாக்கி,
மரச்சட்டத்தைத் துருவித் தூவி,
என் ஓவியக் கித்தான்களிடையே
அணிற்படுக்கை.
என்ன செய்வது?
எப்போதோ வரும் என்னை
எப்போதுமிருக்கும் அவன்,
மோட்டுவளையிலிருந்து பார்த்திருந்தான்.
சிரித்து நகர்ந்தேன்.
கிக்.,கிக்...,கிக்.......,ககீக்..............
எனப் பெருங்குரலெடுத்தான்,
'installation' கலைஞன்.
 
 
எல்லோரைப்போல இறப்பேன்.
இயேசு போல உயிர்ப்பேன்.
நினைவுகளில் கரைந்து
நிரந்தரமாய் அழிவேன்.


தேடியும் தானாகவும்.
புதைக்கவோ எரிக்கவோ
இடமின்றி எங்கும் பிணங்கள்.
அவையவைக்கேற்ற
அழுகல் மணம்.
நரம்புகள் திரித்த கயிற்றில்
அந்தரத்திலாடும் சிவம்.


தாயின் மடி விட்டிறங்கிய
குஞ்சுகளைக்காலம் கவ்விக்கொண்டது.
கதறிய குஞ்சுகளின் எலும்புகளுக்குச்
சாகா வரம் அளித்தாள் ஆதி.
எலும்புகளில் எழுதப்பட்ட செய்தியால்
லிங்கத்தைத் தேடித் துளைத்தன,முட்கள்.
அங்கும் ஆதியைக் கண்டு
அவளுள் கரைந்தன.
ஆதி சிவம்.


"இவன் ஓவியன்டீ....."
தலை தூக்கி அலறியது,
வலது மூளையை ருசித்த புழு.
" தமிழன்",
"ஆசிரியன்",
"ஆட்டக்காரன்",
" ",
" ",
என எழுந்த குரல்களை மீறி ஒலித்தது,
" ஒரு நொடி மௌன அஞ்சலி".

தலை தாழ்த்தி உண்ணத்தொடங்கின,
உடலெங்கும் புழுக்கள்.


சிலந்தி வலையென
போட்டு வைத்த பாதைகளுக்குள்
சிக்கிக் கொண்டேன்.
விழுங்கி புதுப்பாதை காட்ட
விரைந்து வந்தது சிலந்தி.


குப்பை வண்டிகளே
வராத இடத்தில் நான்.
வகை வகையாய்,
மூட்டை மூட்டையாய்,
மலை மலையாய்,
குப்பைகள்.
தீமூட்டும் நாளில்,
சுடலை பூசி
ஆடும் சிவம்.


கட்டி என்னைத் தொங்கவிட்டு
கழற்றிக்கழற்றிச் சிரித்தார்கள்.
சில நான்.
சில அவர்கள்.
ஆளெதிர்பார்த்து
அவிழ்க்கப்படாமல் சில.


என் மூச்சு
உன் இதயம்
நிறைக்கும் நாளில்,
நிறுத்தியிருப்பேன் நான்.


இலையும் அசையா மரம்.
வெயில் விழுங்கிய காற்று.
வெக்கை நிறைந்த அறை.
உயிரல்லா மின்விசிறி.
புழுக்கமென அலையும் ஆசிரியர்.
அனைத்துப் பாடவேளைகளும்
அமைதியாய் மாணவர்கள்.


ஒவ்வொன்றாய் மாற்றினேன்
சிறகுகளை.
பார்க்க அழகு,
பறக்க இயலவில்லை.
எல்லாம் களைந்து
காற்றில் தாவினேன்,
சிறகில்லாச் சிறகாய் நான்.
 
 
எழுதி எழுதித்தீர்க்கிறேன்,
என்னுள் நிறைந்த சொற்களை.
உனக்கான ஒன்று
கருவாகவேண்டி.
எழுதப்படாத வார்த்தையாய்
என்னுள் நீ.
 
 
நினைவெல்லாம் நிறைந்திருந்தும்
கனவினில் வந்ததேயில்லை.
விந்தை நோய்க்கு மருந்து கேட்டேன்,
கனவுகளை ஆளும் டாலியிடம்.
சொன்னதெல்லாம் செய்த பின்
தூக்கம் நிறைத்த கனவுகளில்
விந்தை உருவங்கள் மீதேறி
வந்தான் டாலி.
அவன் மீசையில் குத்திய
பூவாய் நான்.
Photo: நினைவெல்லாம் நிறைந்திருந்தும்
கனவினில் வந்ததேயில்லை.
விந்தை நோய்க்கு மருந்து கேட்டேன்,
கனவுகளை ஆளும் டாலியிடம்.
சொன்னதெல்லாம் செய்த பின்
தூக்கம் நிறைத்த கனவுகளில்
விந்தை உருவங்கள் மீதேறி
வந்தான் டாலி.
அவன் மீசையில் குத்திய
பூவாய் நான்.
தேடியலைந்தேன்,
அகப்படவேயில்லை.
இளைப்பாற அமர்ந்தேன்,
அருகினில் நீ.


உயர்திணை,அஃறிணையில்
ஒட்டாத தனித்திணையாய்
உன்னால் நான்.


எழுதப்படாத,
சொல்லப்படாத,
நினைக்கப்படாத
ஏதோ ஒன்றில்
நிரந்தரமாய்
நீயும் நானும்.


வெளியெங்கும் வீசப்பட்ட
சொற்பிணங்களிடையே
கனவுகள் பருகி
வாழ்ந்திருக்கிறது மனம்.


உடற்புணர்ச்சியின்
முடிவில் தொடங்கி
அடி,முடி தெரியாமல்
அலைகிறது,
உள்ளப்புணர்ச்சி.